அமைச்சருக்கே ஆட்டம் காட்டிய அரசு தலைமை மருத்துவர்!
திட்டக்குடி, மார்ச் 21-கடலூர் மாவட்டம், திட்டக்குடி அரசு மருத்துவ மனையில் திடீர் என்று உள்ளூர் அமைச்சர் சி.வெ.கணேசன் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வில், அப்போது 9 மருத்துவர்கள் பணியில் இருக்க வேண்டிய நேரத்தில், ஒரு பெண் மருத்துவர் மட்டுமே பணியில் இருப்பதை கண்டு அதிர்ந்து போனார். அப்போது, புற நோயாளிகள் கூட்டம் அதிகமாக இருப்பதை கண்ட அமைச்சர், 07:30 மணிக்கு பணிக்கு வர வேண்டிய அரசு மருத்துவர்கள் 9.00 மணி ஆகியும் வரவில்லை ஏன் என்று விசாரித்தார். பின்னர், அமைச்சர் வந்த செய்தி அறிந்த தலைமை மருத்துவர் சேப்பானந்தம் அவசர அவசரமாக மருத்துவமனைக்கு வந்தார்.
அப்போது அமைச்சர் எங்கே மருத்துவர்கள்? என்று கேட்டதற்கு இருவர் மருத்துவ விடுப்பு என்றும், மீதமுள்ள மருத்துவர்கள் எங்கே என்று கேட்டதற்கு வெறும் கதைகதையாய் கூறிக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் கடுப்பான அமைச்சர் மருத்துவமனையை இழுத்து பூட்டி விடலாமா? என்று கேட்டார்.
பின்பு, இது குறித்து சுகாதாரப் பணிகள் மாவட்ட இணை இயக்குநரிடம் புகார் அளித்து, பணிக்கு வராத மருத்துவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ள கூறினார்.
மேலும் இது குறித்து பொதுமக்களிடம் கேட்டபோது, இங்கு பணிபுரியும் மருத்துவர்கள் சரியான நேரத்திற்கு பணிக்கு வருவதில்லை என்றும், பணி முடியும் முன்பு மருத்துவமனையில் இருந்து சென்று விடுவதாகவும், சிகிச்சைக்கு வரும் நோயாளிகளை சிதம்பரம், விழுப்புரம், அரியலூர் போன்ற இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்து அனுப்பி விடுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். அரசு மருத்துவமனையை நம்பி உள்ள ஏழை எளிய மக்களின் நிலைமையை கருத்தில் கொண்டு அரசு மருத்துவமனைகளை மேம்படுத்த வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது.
Comments
Post a Comment