கோவை உணவு பாதுகாப்பு துறையினர்,ஒருங்கிணைப்பில் உபயோகித்த சமையல் எண்ணெயில் பயோடீசல் தயாரித்து, கின்னஸ் சாதனை முயற்சி..
உபயோகித்த சமையல் எண்ணெயை மறுசுழற்சி செய்து பயோடீசல் தயாரிப்பதற்கான திட்டத்தில் கின்னஸ் சாதனை நிகழ்த்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட உணவுப்பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்..
உணவகங்கள், ஹோட்டல்கள், இனிப்பு, கார வகை தயாரிப்பாளர்கள், தொழிற்சாலை கேன்டீன்களில் உணவுப்பொருட்களை தயாரிக்கும்போது சில இடங்களில் சமையல் எண்ணெய்யை பலமுறை தொடர்ந்து பயன்படுத்துகின்றனர். இதனால், உணவு செரிமான தன்மை குறைவு, கெட்ட கொழுப்பு, குடல் பாதிப்புகள் போன்ற உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. எனவே, உபயோகித்த சமையல் எண்ணெய்யை உணவுப் பாதுகாப்புத்துறையின் அங்கீகாரம் பெற்ற நிறுவனங்கள் மூலம் பெற்று மறுசுழற்சி செய்து பயோடீசல் தயாரிப்பதற்கான திட்டம் கோவையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இது குறித்து உணவு பாதுகாப்பு துறை அலுவலர் தமிழ்செல்வன் கூறுகையில்,இத்திட்டத்தின்மூலம் இதுவரை, 315 உணவு வணிக நிறுவனங்களில் இருந்து, 32 டன் உபயோகப்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய் பெறப்பட்டு, பயோடீசல் தயாரிப்பதற்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும்,தற்போது தீபாவளி பண்டிகை வருவதால், நவம்பர் மாதத்தில் அதிகப்படியான உபயோகித்த சமையல் எண்ணெய்யை திரட்டி, அதனை பயோடீசல் தயாரிக்க வழங்க உள்ளோம். இது இந்தியாவிலேயே முதல் முயற்சி ஆகும். இதற்குமுன், கடந்த 2019-ம் ஆண்டில் பிரேசில் நகரத்தில் ஒரே மாதத்தில் 50,501 லிட்டர் உபயோகித்த சமையல் எண்ணெய் திரட்டப்பட்டு மறுசுழற்சி செய்வதற்காக வழங்கப்பட்டது உலக சாதனை நிகழ்வாக சான்றளிக்கப்பட்டுள்ளது. அதனை முறியடிக்கும் வகையில் கின்னஸ் உலக சாதனை வலைதளத்தில் விண்ணப்பம் பதிவு செய்யப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்..
Comments
Post a Comment