70 ஆண்டுகளுக்கு மேலாக அடிப்படை வசதிகளின்றி தவிக்கும் போடி சாலி மரத்துப்பட்டி கிராமம்

போடி நாயக்கனூர்,
செப்டம்பர் 27

தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் ஒன்றியம், டொம்புச்சேரி ஊராட்சிக்குட்பட்ட சாலி மரத்துப்பட்டி கிராமத்தில் 200 க்கும் பேற்பட்ட வீடுகளில் சுமார் 500 மக்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமத்திற்கு இந்தியா சுதந்திரம் அடைந்ததலிருந்து  தற்பொழுது வரை கிராம முக்கிய அடிப்படை வசதிகளான தூய குடிநீர், சுடுகாடு இட ஒதுக்கீடு நிழற்குடை வசதி மற்றும் ரேசன் கடை வசதியின்றி தவித்து வருகின்றனர்.

இது தொடர்பாக பொது மக்கள் டொம்புச்சேரி ஊராட்சி நிர்வாகத்திடம் பல ஆண்டுகள் முறையிட்டும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் மக்கள்  விரக்தியடைந்தனர். தூய குடிநீர் வசதி இல்லாத காரணத்தால் அப்பகுதி மக்கள் உப்பு நீரை குடித்து வருவதால் மழைக்காலங்களில் வாந்தி, உடல் சோர்வு மற்றும் சிறு நோய்களின் தாக்கி பாதிப்புக்குள்ளாகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள தன்னார்வ அமைப்பான விவேகானந்தர் இளைஞர் மன்றம் கடந்த பிப்ரவரி 24-ம் நாள் தேனி மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாளில் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கிராம அடிப்படை வசதியான தூய குடிநீர் இணைப்பு வசதி மற்றும் புதிய ரேசன் கடை கட்டிட வசதி வேண்டி கோரிக்கை மனு சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால் தற்பொழுது வரை கோரிக்கை ஊராட்சி நிர்வாகத்தால் நிறைவேற்றப்படவில்லை.
இந்நிலையில் பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சுடுகாடு இட ஒதுக்கீடு மற்றும் நிழற்குடை இல்லாத காரணத்தினால் அக்கிராம மக்கள் ஒன்றிணைந்து ராஜவாய்க்கால் கால்வாயின் கரைப் பகுதியில் இயற்கை ஈம சடங்குகளை பல ஆண்டுகளாக செய்துவந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மழைக்காலங்களில் இயற்கை சடங்குகளை செய்வதில் இந்த நாகரிக 21-ம் நூற்றாண்டில் கூட வசதி இல்லாமல் தகரத்தினை மேற்கூரையாக பயன்படுத்தி பிணத்தினை எரித்த சம்பவம் அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆகையால் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உரிய நடவடிக்கையினை மேற்கொண்டு சாலி மரத்துப்பட்டி கிராமத்தின் 70 ஆண்டு கால கோரிக்கையினை நிறைவேற்றி தருமாறு சமூக ஆர்வலர்கள், கிராம பொதுமக்கள் மற்றும் விவேகானந்தர் இளைஞர் மன்றத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Comments