தேர்தல் வாக்கை கருத்தில் கொண்டு மாணவர்களுக்கான திட்டங்களை தமிழக அரசு அறிவிக்கவில்லை-தருமபுரியில் நடந்த பாசறை கூட்டத்தில் அமைச்சர் அன்பழகன் பேச்சு
தருமபுரி மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் மாநில செயலாளர் சின்னசாமி எம்எல்ஏ மற்றும் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் இருவரும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். தொடர்ந்து இளைஞர் இளம்பெண்கள் பாசறை கட்டமைப்பிற்கான விண்ணப்ப படிவத்தினை அமைச்சர் கே.பி.அன்பழகன் பாசறை இளைஞர்களுக்கு வழங்கினர். இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன்,
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பத்தாம் வகுப்பு, பதினோராம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு அவர்களின் வாழ்க்கை நிலையை கருத்தில் கொண்டு தொலைநோக்கு பார்வையுடன் விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டம், இலவச மடிக்கணினி, மாணவ-மாணவிகளுக்கு எதிர்கால படிப்பிற்காக வைப்புத் தொகை உள்ளிட்ட ஏராளமான திட்டங்களை வழங்கி உள்ளார். பள்ளி மாணவர்களுக்கு வாக்குரிமை இல்லாத நிலையில் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல், அவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு திட்டங்களை அறிவித்தார். மேலும் அவர்களுக்கு திட்டங்கள் அறிவிப்பதன் மூலம் நமக்கு தேர்தலில் வாக்கு அதிகமாக கிடைக்கும் என்று ஜெயலலிதா எண்ணவில்லை. எனவே வருகின்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில் மூன்றாவது முறையாக அதிமுகவை ஆட்சிக் கட்டிலில் அமர இளைஞர், இளம் பெண்கள் பாசறை சேர்ந்த இளைஞர்கள் அரசின் சாதனைகளையும், திட்டங்களையும் எடுத்துச் சொல்லி உறுதுணையாக இருக்கவேண்டும் என அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார்.
Comments
Post a Comment