காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறி மண்டலநாயனகுண்டா அருகே வாலிபர் உயர்மின் அழுத்தம் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல்!
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த மண்டலநாயனகுண்டா பகுதியைச் சேர்ந்த நடராஜ் மகன் தினேஷ்குமார் (23) பட்டப்படிப்பை முடித்துவிட்டு தங்களது நிலத்தில் கோழிப்பண்ணை வைத்து வருகிறார்.
தினேஷ்குமாரின் தந்தை நடராஜ் 2006 ஆம் ஆண்டு அதே பகுதியில் இரண்டரை ஏக்கர் அளவில் நிலத்தை சென்னப்ப நாயுடு என்பவரிடம் வாங்கியுள்ளார்.
சில காலங்கள் சென்ற நிலையில் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நடராஜ் இறந்துள்ளார்.
நடராஜ் இறந்த பின்னர் அவருடைய மகன் தினேஷ்குமாரிடம் அந்த இரண்டரை ஏக்கர் நிலத்தில் பக்கத்து வீட்டைச் சேர்ந்த ராஜா (47) என்பவர் உங்களுடைய சொத்தில் 45 சென்ட் இடம் எனக்கு சொந்தம் என்று கூறி இவர்களிடம் பலமுறை தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
அதன் பின்னர் தினேஷ் குமரை ராஜா பலமுறை தாக்கியுள்ளார். அதுமட்டுமில்லாமல் சில தினங்களுக்கு முன்பு தினேஷ்குமாரின் கோழிப்பண்ணையை தீவைத்தும் எரித்துள்ளார்.
இதன் காரணமாக கந்தலி காவல் நிலையத்தில் தினேஷ்குமார், ராஜா மீது பலமுறை புகார் அளித்துள்ளார். ஆனாலும் அவர் மீது எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை கூறி இன்று தினேஷ்குமார் அவரது வீட்டு அருகாமையிலுள்ள உயர் மின்னழுத்த கோபுரத்தின் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார்.
சம்பவம் குறித்து திருப்பத்தூர் துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் கந்திலி காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சமரச பேச்சில் ஈடுபட்டனர்.
இருப்பினும் சமாதானமாக தினேஷ்குமார் வட்டாட்சியர் வரவழைத்து என்னுடைய நிலத்தை அளவீடு செய்து கொடுத்தால் மட்டுமே நான் கோபுரத்தில் இருந்து கீழே இறங்குவேன் என்று கூறினார்.
அதன் பின்னர் வட்டாட்சியர் தலைமையில் தினேஷ்குமார் நிலத்தை அளந்து அளவிட்ட பின்னரே சுமார் 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தினேஷ்குமார் உயர் மின் கோபுரத்தில் இருந்து தீயணைப்புத் துறையினர் உதவியுடன் கீழே இறங்கினார்.
கந்திலி காவல் நிலையத்தில் புகார் எடுக்கவில்லை என கூறி மண்டலநாயனகுண்டா பகுதியில் வாலிபர் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.