ஆம்பூர் அருகே இணைய வழி தொடர்புகளுக்காக அல்லாடும் கிராமங்கள்.

திருப்பத்தூர் மாவட்டம் ஜுலை 28 ‌‌                 

ஆம்பூர் அருகே இணைய வழி தொடர்புகளுக்காக அல்லாடும் கிராமங்கள்.

மூலைபஜார் வனப்பகுதிக்கு படையெடுக்கும் இளைஞர்கள்.


ஆம்பூர் அருகே அரங்கல்துருகம் ஊராட்சியில் உள்ளது சுட்டக்குண்டா என்ற மலையோர கிராமம்.சுமார் 200- க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் இப்பகுதியில் வாழ்ந்து வருகின்றனர். இந்த கிராமத்தில் உயர் கல்வி படித்த இளைஞர்கள் அதிக அளவில் உள்ளனர். அதேசமயம் மேல்நிலைப்பள்ளி உயர்கல்வி படித்து வரும் இளைஞர்களும் உள்ளனர்.


கொரனா வைரஸ் பரவல் காரணமாக இப்போது நாடு முழுவதும்  ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த கிராமத்தில் உள்ள உயர் கல்வி படித்த இளைஞர்கள் சென்னை , பெங்களூர் , மைசூர் போன்ற முக்கிய நகரங்களில் உள்ள மென்பொருள் நிறுவனங்கள் உள்ளிட்ட நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர். சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அவரவர் வீடுகளில் இருந்தே இப்போது இணைய வழியில் தனது பணிகளை செய்ய  உத்தரவிட்டுள்ளது.இதற்காக சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பணி செய்யும் இளைஞர்கள் செல்போன் சிக்னல் கிடைக்காததால் , சுட்டக்குண்டா அருகே உள்ள மூலைபஜார் பகுதிக்கு வருகின்றனர்.பகல் நேரங்களில் இப்பகுதியில் ஒன்று சேரும் இளைஞர்கள் இரவு நேரங்களில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகம் இருப்பதால் அச்சப்பட்டு வீடுகளுக்கு செல்லுகின்றனர். அதேபோல் இப்போது இப்பகுதியில் அடிக்கடி மழை பெய்து வருவதும் இவர்களின் தகவல் தொடர்புகளுக்கு பெரும் இடையூறாக உள்ளது.


சுட்டகுண்டா கிராமத்தை சேர்ந்த உயர்நிலைக் கல்வி, மேல்நிலை கல்வி மற்றும் உயர்கல்வி படித்து வரும் மாணவ மாணவிகளுக்கும் இதேபோன்று இடையூறுகள் உள்ளது. இந்த மாணவ ,  மாணவியர் இணையவழி வகுப்புகளை குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாணவர்கள் மற்றும் மாணவிகள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர்.


இதே அரங்கல்துருகம் ஊராட்சியில் உள்ள காட்டுவெங்கடாபுரம் , மத்தூர்கொல்லை பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள், மாணவ-மாணவிகளும் இதேபோன்று இணைய வழி தொடர்பு இல்லாமல் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகின்றனர்.


மிட்டாளம் ஊராட்சியை ஒட்டி அடர்ந்த வனப்பகுதியில் ஊட்டல் தேவஸ்தானம் உள்ளது. இந்தக் கோயிலுக்கு வரும் பக்தர்களும் சுற்றுலா பயணிகளும் கூட செல்போன் சிக்னல் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். பைரப்பள்ளி மற்றும் கவுண்டன்பாளையம் பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மாணவர்களுக்கும் இணையவழி தொடர்புகள் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.எனவே மேற்கண்ட பகுதிகளில் செல்போன் டவர் நிறுவினால் நீண்ட நாளாக இப்பகுதியில் நிலவிவரும் பிரச்சனைக்கு ஒரு தீர்வு காணலாம் என்பது இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பு.         ‌‌ ‌

Comments