காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தில் சிஎம்டிஏ கட்டுப்பாட்டிலுள்ள 4 ஊராட்சிகளில் 40 ஆண்டுகளாக நிதியை விடுவிக்காததால் அடிப்படை வசதி செய்ய முடியாமல் கடும் அவதி கலெக்டர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
கூடுவாஞ்சேரி, காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தில் சிஎம்டிஏ கட்டுப்பாட்டிலுள்ள 4 ஊராட்சிகளில் கடந்த 40 ஆண்டுகளாக சிஎம்டிஏ நிதியை விடுவிக்காததால் அடிப்படை வசதி செய்ய முடியாமல் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து மாவட்ட கலெக்டர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். செங்கல்பட்டு மாவட்டத்துக்கு உட்பட்ட காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தில் 39 ஊராட்சிகள் உள்ளன. இதில் சிஎம்டிஏ கட்டுப்பாட்டிலுள்ள 4 ஊராட்சிகளில் கடந்த 40 ஆண்டுகளாக சிஎம்டிஏ நிதியை விடுவிக்காததால் அடிப்படை வசதி செய்ய முடியாமல் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இதுபற்றி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் ஊராட்சி செயலர்கள் மற்றும் பொதுமக்கள் பலமுறை வலியுறுத்தியும் கண்டுக்கொள்ளவில்லை. எனவே இதுகுறித்து மாவட்ட கலெக்டர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். இதுகுறித்து ஊராட்சி செயலர்கள் மற்றும் பொதுமக்கள் கூறுகையில், காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தில் உள்ள 39 ஊராட்சிகளில் குருவன்மேடு, வில்லியம்பாக்கம், ரெட்டிப்பாளையம், பாலூர் உள்ளிட்ட 15 ஊராட்சிகளில் மட்டும் ரூபன் என்ற திட்டத்தின் கீழ் சாலை, கால்வாய், சாலையோர நடைபாதையில் பார்க்கிங் வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து வருகின்றனர். மீதமுள்ள 24 ஊராட்சிகளில் போதிய நிதி ஆதாரம் இல்லாததால் இந்த திட்டத்தின் கீழ் அடிப்படை வசதிகள் செய்ய முடியவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் சென்னை புற நகரை ஒட்டியுள்ள வண்டலூர், மண்ணிவாக்கம், ஊரப்பாக்கம் மற்றும் நெடுங்குன்றம் ஆகிய முதல்நிலை ஊராட்சிகளை கடந்த 1980ஆம் ஆண்டு சிஎம்டிஏ கட்டுப்பாட்டில் சேர்க்கப்பட்டது. இந்த நான்கு ஊராட்சிகளிலும் மனைப்பிரிவு, கட்டிட வரைபடம், வளர்ச்சி கட்டணம், திறந்தவெளி சேவை கட்டணம், தனித்த மனை வரன்முறை கட்டணம் ஆகியவை வசூலிக்கப்பட்டு சிஎம்டிஏவுக்கு செல்கிறது. இதில் சிஎம்டிஏவுக்கு செலுத்தப்படும் நிதியை மேற்கண்ட நான்கு ஊராட்சிகளுக்கும் விடுவிக்கப்பட வேண்டும். ஆனால் 40 ஆண்டுகள் ஆகியும் இதுவரை மேற்படி நிதியை 4 ஊராட்சிகளுக்கும் விடுவிக்கப்படவில்லை. மேலும் இந்த நான்கு ஊராட்சிகளிலும் ரூபன் என்ற திட்டமும், சிஎம்டிஏ நிதியும் கிடைக்காததால் சாலை, கழிவுநீர் கால்வாய் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகளை செய்ய முடியாமல் ஊராட்சி நிர்வாகத்தினர் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் மேற்படி நான்கு ஊராட்சிகளும் பெயருக்காகத்தான் சென்னையை ஒட்டியுள்ள ஊராட்சிகளாக உள்ளன. ஆனால் எந்த ஒரு அடிப்படை வசதிகளும் செய்ய முடியாததால் சுகாதார சீர்கேடாக உள்ள ஊராட்சிகளாக மாறி உள்ளன. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை வலியுறுத்தியும் கண்டுகொள்ளவில்லை. எனவே காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் ரூபன் என்ற திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றும், மேற்படி நான்கு ஊராட்சிகளிலும் சிஎம்டிஏ திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதியை உடனடியாக விடுவிக்க மாவட்ட கலெக்டர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
Comments
Post a Comment