கிருஷ்ணகிரி மாவட்டத்தில்
தட்டெழுத்து பயிலகங்கள் இயங்க அனுமதிக்க வேண்டும்
கலெக்டரிடம் மனு
கிருஷ்ணகிரி, ஜூன் 7:
தட்டெழுத்து பயிலகங்கள் இயங்க அனுமதிக்க வேண்டும் என கலெக்டரிடம் கோரிக்கை மன அளிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்ட வணிகவியல் பள்ளிகள் சங்கத்தின் சார்பில் நேற்று கலெக்டர் பிரபாகரிடம் மனு ஒன்று அளிக்கப்பட்டது. அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகம் முழுவதும் சுமார் 3 ஆயிரத்து 500 தட்டெழுத்து பயிலகங்கள் செயல்பட்டு வருகின்றன. கொரோனா நோய் தொற்று காரணமாக தமிழக அரசின் உத்தரவின் பேரில் கடந்த மார்ச் 18-ம் தேதி முதல் பயிலகங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. கடந்த மூன்று மாதங்களாக பயிலகங்கள் செயல்படாமல் உள்ளன. தற்போது தமிழக அரசு பல்வேறு தொழில்களுக்கு தளர்வு வழங்கி வருகிறது. எனவே எங்களது தட்டச்சு பயிலகங்களுக்கும் தளர்வு வழங்கி உத்தரவிடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
தட்டச்சு பயிலகங்கள் பெரும்பாலும் வாடகை கட்டிடங்களிலேயே இயங்கி வருகின்றன. மாத வாடகை, மின் கட்டணம் செலுத்த இயலாத நிலையில் உள்ளோம். இதை மட்டுமே நம்பியுள்ள குடும்பங்கள் மற்றும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, பயிலகங்கள் இயங்க அனுமதி அளிக்க வேண்டும். அனுமதி அளிக்கும் பட்சத்தில் சமூக இடைவெளியை கடைபிடித்தும், முகக்கவசம் அணிந்தும், கிருமி நாசினி கொண்டு தட்டச்சு எந்திரங்களையும், கைகளையும் அவ்வப்போது சுத்தம் செய்தும், சளி, இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறி உள்ள மாணவர்களுக்கு அனுமதி மறுத்தும், சுகாதாரத்தை பேணிக்காப்போம் எனவும் உறுதி கூறுகிறோம். மேலும் அரசின் சட்ட, திட்டங்களுக்கு உட்பட்டு செயல்படுவோம் எனவும் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
---------------
தீபக் குமார்,
கிருஷ்ணகிரி