ஆதார் பதிவு, திருத்தம்அஞ்சல் அலுவலகங்களில் மீண்டும்நாளை முதல் துவங்கவுள்ளதுகிருஷ்ணகிரி, ஜூன் 7

ஆதார் பதிவு, திருத்தம்
அஞ்சல் அலுவலகங்களில் மீண்டும்
நாளை முதல் துவங்கவுள்ளது
கிருஷ்ணகிரி, ஜூன் 7:
ஆதார் பதிவு மற்றும் திருத்தம் செய்யும் பணி அஞ்சல் அலுவலகங்களில் மீண்டும் நாளை (8ம் தேதி) முதல் துவங்கவுள்ளது.
இது குறித்து கிருஷ்ணகிரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் முனிகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிருஷ்ணகிரி கோட்டத்தில் 22 அஞ்சல் அலுவலகங்கள் ஆதார் மையங்களாக செயல்பட்டு வருகிறது. கொரோனா நோய்த் தொற்றுக் காரணமாக ஆதார் பதிவு, திருத்தம் கொண்ட பணிகள் தற்காலிகமாக செயல்படாமல் இருந்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் ஆதார் பதிவு, திருத்தம் செய்யும் பணிகள் அஞ்சல் அலுவலகங்களில் நாளை (8ம் தேதி) முதல் துவங்கவுள்ளது.
எனவே, புதியதாக ஆதார் அட்டை எடுக்க விரும்புவோர் மற்றும் ஆதார் அட்டையில் திருத்தங்கள் செய்ய விரும்புவோர், இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். புதிய பதிவுக்கு கட்டணம் ஏதும் செலுத்த வேண்டியதில்லை. ஆதார் அட்டையில் திருத்தங்கள் மேற்கொள்ள ரூ. 50 கட்டணம் செலுத்த வேண்டும். மொபைல் எண், இ&மெயில் முகவரி பதியவும், திருத்தங்கள் மேற்கொள்ளவும் ஆவணங்கள் தேவையில்லை. பிற திருத்தங்கள் மேற்கொள்ள உரிய ஆவணங்கள் கொண்டுவர வேண்டும். மேலும் விபரங்களுக்கு அருகில் உள்ள தபால் நிலையங்களை அணுகி தெரிந்துகொள்ளலாம். தபால்துறையின் ஆதார் சேவையை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு தனது செய்திக்குறிப்பில் கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் முனிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
------------------

வேப்பனஹள்ளி அருகே
முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளையொட்டி
நலத்திட்ட உதவிகள் & எம்எல்ஏ.க்கள் பிரகாஷ், முருகன் வழங்கினர்
கிருஷ்ணகிரி, ஜூன் 7:
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி அருகே முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளையொட்டி நலத்திட்ட உதவிகளை எம்எல்ஏ.க்கள் வழங்கினர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி அடுத்த வி.மாதேப்பள்ளி கூட் ரோடு பகுதியில் திமுக பிரமுகர் கிருஷ்ணமூர்த்தி ஏற்பாட்டில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் தளி பிரகாஷ் எம்எல்ஏ., மேற்கு மாவட்ட திமுக துணை செயலாளர் வேப்பனஹள்ளி முருகன் எம்எல்ஏ., ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று, ஆயிரம் பேருக்கு பிரியாணி மற்றும் இனிப்பு வழங்கியதுடன், தூய்மை பணியாளர்கள், டேங்க் ஆபரேட்டர்கள் மற்றும் ஏழை, எளியோர் 200 பேருக்கு அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் உளிட்ட மளிகை பொருட்களை வழங்கினர்.
இந்நிகழச்சியில், மாவட்ட பொருளாளர் ஜெயராமன், பொதுக்குழு உறுப்பினர் சின்னசாமி, ஒன்றிய செயலாளர் ரகுநாத், ஒன்றிய குழு தலைவர் மாதேஸ்வரன், கவுன்சிலர்கள் முனிராஜ், தனஞ்செயன், நரசிம்மன், ஒன்றிய அவைத்தலைவர் கிருஷ்ணன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சீனிவாசன், ஊராட்சி மன்றத் தலைவர் ராகவன், முன்னாள் தலைவர் ரவி, உமர்அலி, முன்னாள் கவுன்சிலர் சேகர், சதாசிவம், பாஸ்கர், வினய் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
--------------------

கிருஷ்ணகிரி மாவட்டத்தில்
டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க
முன்னேச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்
கலெக்டர் வேண்டுகோள்
கிருஷ்ணகிரி, ஜூன் 7:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க முன்னேச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கலெக்டர் பிரபாகர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவுவதற்கான தட்ப வெப்பநிலை மற்றும் சூழல் தற்போது நிலவி வருகிறது. எனவே, பொதுமக்கள் தங்கள் வீடுகளில் பயன்படுத்தும் குடிநீர் தொட்டிகளை முறையாக சுத்தம் செய்து, குளோரினேசன் செய்து குடிநீரை பயன்படுத்த வேண்டும். கொசுக்கள் உற்பத்தியாக சாதகமாக உள்ள நீர்த்தொட்டிகள், பயன்பாடற்ற உரல்கள், உடைந்த மண்பாண்டங்கள், உபயோகமற்ற பிளாஸ்டிக் பொருட்கள், வீட்டில் உள்ள ரெபிரிஜிரேட்டர், பூந்தொட்டிகள் மற்றும் டயர்கள் போன்றவற்றில் தேங்கும் நீரில் “ஏடிஸ்” வகை கொசு புழுக்கள் வளருவதால், டெங்கு காய்ச்சல் பரவ ஏதுவாக உள்ளது. எனவே, பொதுமக்கள் வீட்டு மாடியில் தண்ணீர் தேங்கி உள்ள இடங்களை உடனடியாக சுத்தம் செய்திட வேண்டும். உபயோகமற்ற பொருட்களில் மழைநீர் மற்றும் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளுமாறும், வீட்டின் அருகில் கழிவுநீர் கால்வாய்களில் நீர் தேங்காவண்ணம், சுகாதாரமாக வைத்துக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
அத்துடன் காய்ச்சல் அறிகுறிகள் தொடர்ச்சியாக இருப்பின், அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களை அணுகி, ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்து, காய்ச்சலின் தன்மையினை உறுதி செய்து கொண்டு, நிலவேம்பு ககாசயத்தினை தொடர்ந்து பருக வேண்டும். காய்ச்சல் குறித்த அறிகுறிகள் ஏதேனும் தென்பட்டால் உடனடியாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையின் 04343&233009 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு தனது செய்திக்குறிப்பில் கலெக்டர் தெரிவித்துள்ளார்.
-------------------

கிருஷ்ணகிரி புதிய அரசு மருத்துவக்கல்லூரி
கட்டுமான பணியினை மண்டல தலைமை பொறியாளர் ஆய்வு
கிருஷ்ணகிரி, ஜூன் 7:
கிருஷ்ணகிரி புதிய அரசு மருத்துவக்கல்லூரி கட்டுமான பணியினை மண்டல தலைமை பொறியாளர் நேரில் ஆய்வு செய்தார்.
கிருஷ்ணகிரி & பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போலுப்பள்ளியில் புதிய அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை 25 ஏக்கர் பரப்பளவில், ரூ.339 கோடியே 95 லட்சம் மதிப்பில் கட்டப்படுகிறது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பிற்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் பணிகள் நிறுத்தப்பட்டது. இதையடுத்து ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால், கடந்த மே மாதம் 4வது வாரத்தில் கட்டுமான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கட்டுமான பணிகள் குறித்து திருச்சி மண்டல தலைமை பொறியாளர் ரவிச்சந்திரன் நேற்று நேரில் ஆய்வு செய்தார். அப்போது, தேசிய நெடுஞ்சாலையில் இருந்து மருத்துவக்கல்லூரி அமைய கூடிய இடைவெளி, மருத்துவக்கல்லூரியின் உள்ளே சாலைகள் அமைக்கப்படும் அளவீடுகள், மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள், செவிலியர்கள் விடுதிகள் கட்டிடம் கட்டப்படுவது குறித்து கேட்டறிந்தார். வரைப்படம் மூலம் கட்டுமான பணிகள் குறித்து தொடர்புடைய பொறியாளர்களிடம் விளக்கம் கேட்டு உரிய அறிவுரைகள் வழங்கினார். மேலும், கட்டுமானப் பணிகளை தரமாகவும், விரைந்தும் முடிக்க வேண்டும் என்று பணியாளர்களுக்கு  அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின் போது பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் மணியரசு, உதவி செயற்பொறியாளர்கள் மகாவிஷ்ணு, முரளி, முகமதுநயினார் மற்றும் ஒப்பந்தாரர் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
--------------------
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்
பாட்டி, பேத்தி உள்பட 8 பேருக்கு கொரோனா
சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்வு
கிருஷ்ணகிரி, ஜூன் 7:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பாட்டி, பேத்தி உள்பட 8 மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
சென்னையில் இருந்து வந்த கொரோனா பாதித்த நபருடன் தொடர்பில் இருந்த கிருஷ்ணகிரி மாவட்டம் ஐகொகுந்தம்கொத்தப்பள்ளியைச் சேர்ந்த 29 வயது வாலிபர், மோடிகுப்பத்தை அடுத்த நக்கல்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 29 வயது வாலிபருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது. மேலும், சென்னையில் இருந்து ஊத்தங்கரை காரப்பட்டு கிராமத்திற்கு வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 70 வயது மூதாட்டி, அவரது 8 வயது பேத்தி, ரெட்டிவலசை கிராமத்தைச் சேர்ந்த 7 வயது சிறுவன், பீகார் மாநிலத்தில் இருந்து வந்த அத்திவீரம்பட்டியைச் சேர்ந்த 26 வயது லாரி டிரைவர், கேரளா மாநிலத்தில் இருந்து ஊர் திரும்பிய ஊத்தங்கரையை அடுத்த வளத்தானூரைச் சேர்ந்த 34 வயது பொக்லைன் டிரைவர், ஆந்திர மாநிலத்தில் இருந்து வந்த கொம்மம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மினி பால் டேங்கர் லாரி டிரைவரான 25 வயது வாலிபர் ஆகியோருக்கு நேற்று கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இவர்கள் 8 பேரில், 6 பேர் ஊத்தங்கரை சுற்று வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். 2 பேர் பர்கூர் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். அவர்கள் அனைவரும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்று பாதிப்புடன் 6 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இவர்களுடன் சேர்த்து சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.
இவர்கள் வசித்து வந்த பகுதி முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

பாக்ஸ் செய்திக்காக&

விவசாயி கொலை வழக்கில் தொடர்புடையவருக்கு கொரோனா:
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரை அடுத்த மஜித் கொல்லஹள்ளியை சேர்ந்தவர் சென்னப்பன்(54).  இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த முருகேசன்(55) என்பவருக்கும் இடையே நிலப்பிரச்னை இருந்து வந்தது. கடந்த 2ம் தேதி மாலை அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது, முருகேசன் மற்றும் அவரது மகன்களான, 29 வயது வாலிபர் மற்றும் வெற்றிவேல், பரசுராமன் ஆகியோர், சென்னப்பனை கட்டையால் தாக்கினார்கள். இதில் படுகாயம் அடைந்த சென்னப்பன், சம்பவ இடத்திலேயே பலியானார். கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார், முருகேசனை கைது செய்தனர். முதல் குற்றவாளியான முருகேசனின், 29 வயது மகன், சம்பவத்தின் போது காயம் ஏற்பட்டதாக கூறி, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கடந்த 4ம் தேதி ரத்த மாதிரி பரிசோதனைக்காக எடுக்கப்பட்டன. இந்நிலையில் அவருக்கு காயம் குணமடைந்ததால் அவரை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க போலீசார் ஏற்பாடு செய்து வந்தனர். இதற்கிடையே ரத்த மாதிரி முடிவில் அவருக்கு கொரோனா இருப்பது தெரிய வந்தது. இது குறித்து கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனை சார்பில் போலீசாரிடம் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து போலீசார் அவரை கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். கொரோனா குணமடைந்த பிறகு அவரை கைது செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர்.
---------------------

கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில்
பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்
கிருஷ்ணகிரி, ஜூன் 7:
கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அடுத்த மாதவஅக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் திரிவேணி(21). கடந்த மாதம் 26ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் திரும்பி வரவில்லை என கூறி, கடந்த 2ம் தேதி கெலமங்கலம் போலீசில் அவரது பெற்றோர் புகார் அளித்தனர். அதில், சூளகிரியை அடுத்த காமன்தொட்டியை சேர்ந்த நாராயணப்பா மகனான ராஜசேகர்(26) என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டிருந்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாயமான திரிவேணி மற்றும் ராஜசேகரை தேடி வந்தனர்.
இந்த நிலையில், ராஜசேகருடன் கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பி  அலுவலகத்திற்கு நேற்று வந்த திரிவேணி, இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டதாகவும், தனது குடும்பத்தாரிடம் இருந்து பாதுகாப்பு வழங்குமாறும் கேட்டு கோரிக்கை மனுவை அளித்தனர். அதில்,  ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய போது, ராஜசேகருடன் காதல் ஏற்பட்டது. இருவரும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால், எனது பெற்றோர் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. இதனால் தனது கணவர் ராஜசேகர் குடும்பத்தினர் உதவியுடன் கடந்த, 31ம் தேதி திருமணம் செய்து கொண்டோம். சூளகிரி சார்&பதிவாளர் அலுவலகத்தில், திருமணத்தை பதிவு செய்துள்ளோம். எனது குடும்பத்தாரிடம் இருந்து பாதுகாப்பு வழங்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து, இரு தரப்பு பெற்றோரையும் அழைத்து பேச போலீசார் முடிவு செய்துள்ளனர்.
--------------------
 தீபக் குமார்
கிருஷ்ணகிரி.

Comments