மதுக்கடை மூடப்படுவதாக பரவிய வதந்தியால் மாமல்லபுரம்

மதுக்கடை மூடப்படுவதாக பரவிய வதந்தியால் மாமல்லபுரம் அயல்நாட்டு மதுபான கடையில் திரண்ட மதுபிரியர்கள்:  வரிசையில் சென்று பெட்டி, பெட்டியாக மது வகைகளை வாங்கி சென்றனர்

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம், 
மதுக்கடை மூடப்படுவதாக பரவிய வதந்தியால் மாமல்லபுரம் அயல்நாட்டு மதுபான கடையில் திரண்ட மதுபிரியர்கள்  வரிசையில் சென்று பெட்டி, பெட்டியாக மது வகைகளை வாங்கி சென்றனர்.
கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் மது கடைகள் கடந்த சில மாதங்களாக மூடப்பட்டன. பிறகு கோர்ட்டு உத்தரவுப்படி சென்னை தவிர தமிழகத்தில் பல மாவட்டங்களில் மீண்டும் மது கடைகள் திறக்கப்பட்டன. 

இந்நிலையில் தற்போது 4-ம் ஊரடங்கு முடிவுக்கு வரும் வேலையில் சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா தொற்று நாளுக்கு, நாள் அதிகரித்து வரும் நிலையில் இம்மாவட்டங்களில் மீண்டும் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்றும், கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மீண்டும் செங்கல்பட்டு மாவட்டத்தில் மதுகடைகள் மூடப்பட உள்ளதாக சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாக வதந்தி பரவி வருகிறது.
இதனால் மது கடைகள் மூடி விட்டால் மீண்டும் மது கிடைக்காமல் போய் விடுமோ? பிறகு எப்போது கடை திறப்பார்கள் என அச்சமடைந்து பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த மது பிரியர்களின் கூட்டத்தால் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அயல்நாட்டு மதுபான கடையில் (எலைட் டாஸ்மாக்) நேற்று மது பிரியர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
பிறகு தகவலறிந்து உடனடியாக அங்கு மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவேல்முருகன் தலைமையில்  சப்-இன்ஸ்பெக்டர் குப்புசாமி உள்ளிட்ட போலீசார் கூட்டத்தை ஒழுங்குபடுத்தி, சமூக விலகலை கடைபிடிக்கும் வகையில் வரிசையில் சென்று மது வாங்கி செல்ல மதுபிரியர்களிடம் அறிவுறுத்தினர். 
பின்னர் மதுபிரியர்கள் பலர் சில மணி நேரம் காத்திருந்து வரிசையில் சென்று தங்களுக்கு பிடித்த மது வகைகளை பெட்டி, பெட்டியாக வாங்கி சென்றனர். கூட்டத்தில் முன்டியடித்து செல்ல முயன்றவர்களை போலீசார் எச்சரித்து சமூக விலகளை கடைபிடித்து ஒழுக்கத்துடன் வரிசையில் சென்று மது வாங்கி செல்ல அறிவுறுத்தினர். பல மதுபிரியர்கள் மீண்டும் மது கடைகளை மூடிவிட்டார்கள் என்றால் மதுவுக்கு திண்டாட வேண்டியதை உணர்ந்து தங்கள் கார்களை கொண்டு வந்து பல்வேறு மது வகைகளை பெட்டி, பெட்டியாக வாங்கி கார்களில் அடுக்கி எடுத்து சென்றனர். மது பிரியர்கள் வந்த வாகனத்தால் மாமல்லபுரம் இ.சிஆர். சாலையில் உள்ள சர்வீஸ் சாலையில் கார்கள் அணி வகுத்து நின்றன. மேலும் மொத்தமாக மது வாங்கி சென்றவர்களுக்கு வசதியாக அங்கு சாலை ஓர திடீர் பை கடைகளும் தோன்றின. வரிசையில் நின்றவர்களுக்கு துணி பைகளை விற்று வியாபாரம் செய்த துணிப்பை வியாபாரிகளையும் காண முடிந்தது.இதில் மாமல்லபுரம் அயல்நாட்டு மதுகடையில்  (எலைட் டாஸ்மாக்)  மதுபிரியர்கள் பெட்டி, பெட்டியாக மது வாங்கி சென்ற காட்சி  மது பிரியா்கள் வந்த கார்கள் சாலையில் அணிவகுத்து நின்ற காட்சி

Comments