தாலுக்கா அலுவலகங்களில் சுற்றித் திரியும் புரோக்கர்களை காவல் துறையிடம் பிடித்து ஒப்படைக்க வேண்டும்! பொதுமக்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் அமைச்சர் துரைமுருகன் வேண்டுகோள்!!

*தாலுக்கா அலுவலகங்களில் சுற்றித் திரியும்  புரோக்கர்களை காவல் துறையிடம் பிடித்து ஒப்படைக்க வேண்டும்*
         பொதுமக்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் அமைச்சர் துரைமுருகன் வேண்டுகோள்!
வேலூர், ஏப்.27-
தாலுக்கா அலுவலகங்களில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை பெற்றுத் தருவதாக கூறி சுற்றித் திரியும் புரோக்கர்களை காவல் துறையிடம் பிடித்து ஒப்படைக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் அமைச்சர் துரைமுருகன் வேண்டுகோள் விடுத்து சிறப்புரையாற்றினார்.
            வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுக்கா, அம்முண்டி ஆரிமுத்து மோட்டூரில் சிறப்பு மனுநீதி நாள் முகாம் நேற்று நடந்தது. இந்த சிறப்பு மனுநீதி நாள் முகாமுக்கு வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமை வகித்தார். வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி வரவேற்புரையாற்றினார். 
            இதில் வேலூர் தொகுதி எம்.பி., கதிர் ஆனந்த், காட்பாடி ஒன்றியக் குழு பெருந்தலைவர் வேல்முருகன் பேசினர். இந்த சிறப்பு மனுநீதி நாள் முகாமில் அமைச்சர் துரைமுருகன் சிறப்புரையாற்றிப் பேசியதாவது. 
           இது போன்ற சிறப்பு முகாம்கள் ஒவ்வொரு கிராமத்திலும் மாதம் தோறும் நடத்தப்பட வேண்டும். இந்த சிறப்பு மனுநீதி நாள் முகாம் இன்று அம்முண்டியில் நடக்கிறது. இது ஒரு அரசு விழா போல் இல்லாமல் ஒரு திருவிழா போல பிரம்மாண்டமாக நடத்துகின்றனர். இப்படி ஏற்பாடு செய்த அரசு அதிகாரிகளுக்கு எனது பாராட்டுக்களையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். சிறப்பு மனுநீதி நாள் முகாமில் அரசு துறைகள் சார்பில் இடம் பெற்றுள்ள கண்காட்சியில் பல்வேறு துறைகள் சார்ந்த பொருட்கள், விளக்கங்கள் வைக்கப்பட்டுள்ளன.
          பொதுமக்கள் இந்த கண்காட்சியில் உள்ள விவரங்களை தெரிந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன். நான் கடந்த 1971 இல் எம்.எல்.ஏ.வாக முதல் முதலில் தேர்வு செய்யப்பட்டேன். அப்பொழுது மூன்று திட்டங்களை கொண்டு வந்தேன். பொன்னை மேம்பாலம், பாலாற்றில் இருந்து குடிப்பதற்கு தண்ணீர், அம்முண்டியில் சர்க்கரை ஆலை. இந்த மூன்று திட்டங்களில் சர்க்கரை ஆலை கொண்டு வருவதற்கு படாதபாடு பட்டு விட்டேன். ஆனால், நான் இன்று வரை அந்த சர்க்கரை ஆலைக்குள் சென்று ஒரு டீ கூட சாப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சர்க்கரை ஆலையில் ஊழல் செய்தவர்கள், கொள்ளை அடித்தவர்கள் விரைவில் கம்பி எண்ணுவார்கள். அவர்கள் யாராக இருந்தாலும் நான் அவர்களை சும்மா விடமாட்டேன். 
         காட்பாடி தொகுதிக்கு உட்பட்ட  பகுதியில் எங்கு திரும்பினாலும் தரமான சாலைகள், மேம்பாலங்கள், குடிநீர் வசதி, மருத்துவ வசதி, மின்விளக்கு வசதி என்று அனைத்து அடிப்படை வசதிகளையும் நிறைவேற்றி கொடுத்துள்ளேன். இங்கு இலவச வீட்டு மனை பட்டா கேட்டு 492 பேர் மனு கொடுத்துள்ளனர். பட்டா மாற்றத்திற்கு 16 பேரும், புதிய ரேஷன் கார்டுக்கு  50 பேரும், முதியோர் உதவித் தொகைக்கு 47 பேரும், விதவைகள் 13 பேர் இப்படி மனு கொடுத்துள்ளனர். இவ்வாறு பல்வேறு உதவிகளை  இந்த அரசு வழங்கி வருகிறது. உதவிகள் வழங்குவதில் திமுக அரசை மிஞ்சுவதற்கு யாரும் கிடையாது. 
            மேலும், தாலுக்கா அலுவலகங்களில் சுற்றித் திரியும் புரோக்கர்களை பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்து அவர்களை கைது செய்ய பொதுமக்களும், அரசு அதிகாரிகளும் ஒத்துழைக்க வேண்டும். காட்பாடி தொகுதியில் விரைவில் ஐடி பார்க் ஒன்று வரவுள்ளது. அதேபோல சிப்காட் ஒன்றும் காட்பாடி தொகுதியில் விரைவில் வர உள்ளது. இதில் 50 முதல் 75 தொழிற்சாலைகள் செயல்படும்.
            இதன் வாயிலாக காட்பாடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை என்னால் பெற்றுத் தர முடியும். காட்பாடியை சேர்ந்தவர்களுக்கு அதில் முன்னுரிமையும் தரப்படும். எனது கையொப்பம் இல்லாமல் யாருக்கும் வேலை வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது. காட்பாடி தொகுதியில் உள்ளது போல வேறு எங்கும் இல்லை என்பதையும் உங்களிடம் சொல்லிக் கொள்ள நான் கடமைப்பட்டுள்ளேன் என்று  அமைச்சர் துரைமுருகன் பேசினார். 
       இதைத் தொடர்ந்து அரசின் நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கி மகிழ்ந்தார் அமைச்சர் துரைமுருகன். இந்த நிகழ்ச்சியை வேலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சுகுமார் தொகுத்து வழங்கினார்.

Comments