மதுரை கலைத்திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்...
மதுரை கலைத்திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்
கலெக்டர் வழங்கினார்...
மதுரை, நவ. 03-
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் நிஷாந்த் கிருஷ்ணா, நேற்று (02.11.2026) பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் கள்ளர் சீரமைப்பு இணை இயக்குநர் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் விடுதிகளில் 2025-2026-ஆம் கல்வியாண்டில் நடத்தப்பட்ட கலைத்திருவிழா (இலக்கியம் மற்றும் விளையாட்டு) போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை வழங்கினார்.
மதுரை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நல விடுதிகள் மற்றும் கள்ளர் சீரமைப்பு விடுதி மாணவர்களிடையே இலக்கியத் திறன் மற்றும் விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கும் வகையில் கட்டுரைப்போட்டி, பேச்சுப்போட்டி, ஓட்டப்பந்தயம் மற்றும் நீளம் தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்குத் தனித்தனியாக நடத்தப்பட்டன.
இப்போட்டிகளில் வெற்றி பெற்று முதல் மூன்று இடங்களைப் பிடித்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களைப் பாராட்டி மாவட்ட ஆட்சித்தலைவர் சான்றிதழ் மற்றும் கேடயங்களை வழங்கி வாழ்த்தினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர், கள்ளர் சீரமைப்புத் துறை அலுவலர்கள் மற்றும் அரசுத் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.