அரியலூர் மாவட்டத்தில் படுகொலை செய்யப்பட்ட ஊர்க்காவல் படை வீரர் வெங்கடேசன் குடும்பத்திற்கு ரூ.50 இலட்சம் நிவாரண நிதியுதவி செய்து அவரது குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாக்க வேண்டும்: தமிழக முதல்வருக்கு உலகத் திருக்குறள் கூட்டமைப்பின் தலைவர் முனைவர் மு. ஞானமூர்த்தி கோரிக்கை!

அரியலூர் மாவட்டத்தில்  படுகொலை செய்யப்பட்ட ஊர்க்காவல் படை வீரர் வெங்கடேசன்  குடும்பத்திற்கு ரூ.50 இலட்சம் நிவாரண நிதியுதவி செய்து அவரது குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாக்க வேண்டும்:  

தமிழக முதல்வருக்கு 
உலகத் திருக்குறள் கூட்டமைப்பின் தலைவர் முனைவர் மு. ஞானமூர்த்தி கோரிக்கை!

சென்னை, நவ.03-அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம், தளவாய் காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் ஊர்க்காவல் படை வீரராகப் பணியாற்றி வந்த  வெங்கடேசன், மற்றொரு ஊர்க்காவல் படை வீரரான  ராஜகண்ணன் என்பவருடன் இரவுநேர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, மூன்று இளைஞர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ள சம்பவம் மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

பொதுமக்களின் பாதுகாப்பிற்காகத் தனது உயிரைப் பணயம் வைத்து இரவு நேரக் காவல் பணியில் ஈடுபட்டிருந்த ஒரு வீரர், பணியின்போதே படுகொலை செய்யப்பட்டிருப்பது மிகவும் வேதனையளிக்கிறது.

இந்தத் துயரச் சம்பவத்தால் அவரது குடும்பம் ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. அவரது மனைவி ஏற்கெனவே ஆறு ஆண்டுகளுக்கு முன்பே உயிரிழந்துவிட்ட நிலையில், தற்போது குடும்பத்தின் ஒரே ஆதரவாக இருந்த தந்தையையும் இழந்து அவரது இரண்டு குழந்தைகள் நிர்க்கதியான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

அவரது மகன் ஒன்பதாம் வகுப்பிலும், மகள் ஆறாம் வகுப்பிலும் பயின்று வருகின்றனர். இளம் வயதிலேயே தாய், தந்தை இருவரையும் இழந்துள்ள இக்குழந்தைகளின் கல்வி, உணவு, உடை, இருப்பிடம் மற்றும் எதிர்கால வாழ்வாதாரம் ஆகிய அனைத்தும் கேள்விக்குறியாகியுள்ளன.

எனவே, மனிதநேய அடிப்படையிலும், அரசுப் பணியில் ஈடுபட்டிருந்த வீரரின் தியாகத்தை மதிக்கும் வகையிலும், தங்களின் தலைமையிலான தமிழக அரசு உடனடியாகப் பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உலகத் திருக்குறள் கூட்டமைப்பின் சார்பில் பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.
முக்கியக் கோரிக்கைகள்:
      உயிரிழந்த ஊர்க்காவல் படை வீரர் வெங்கடேசன் அவர்களின் குடும்பத்திற்கு ரூ.50,00,000 (ஐம்பது இலட்சம் ரூபாய்) நிவாரண நிதியாக வழங்க வேண்டும்.
வழங்கப்படும் ரூ.50 இலட்சம் தொகையையும் அவரது இரண்டு குழந்தைகளின் பெயர்களில் வங்கியில் பாதுகாப்பான நிலையான வைப்புத் தொகையாக (Fixed Deposit) முதலீடு செய்து, அவர்களின் எதிர்காலப் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும். அக்குழந்தைகளின் பள்ளிக் கல்வி முதல் உயர்கல்வி வரை அனைத்துச் செலவுகளையும் அரசே ஏற்று, அவர்கள் தடையின்றிக் கல்வி பயில உரிய உதவிகளை வழங்க வேண்டும்.
   மேலும்,  குழந்தைகள் வயதுக்கு வந்து வாழ்க்கையில் தன்னிறைவு பெறும் வரை அவர்களுக்குத் தேவையான கல்வி மற்றும் வாழ்வாதாரப் பாதுகாப்பை அரசு உறுதிசெய்ய வேண்டும்.
ஆதரவற்ற நிலையில் தவிக்கும் இக்குழந்தைகளின் எதிர்காலத்தைக் காப்பது அரசின் தலையாய மனிதநேயக் கடமையாகும். 
எனவே, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இக்கோரிக்கையை மிகுந்த கனிவுடன் பரிசீலித்து, உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்து, தாயும் தந்தையும் இழந்து தவிக்கும் அந்த இரண்டு பிஞ்சுக் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு ஒளியேற்ற வேண்டுமென உலகத் திருக்குறள் கூட்டமைப்பின் சார்பில் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.